முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறப்பு; மாஜி., அமைச்சர் சம்பத் குற்றச்சாட்டு
கடலுார்; இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காப்பதில் தி.மு.க., அரசு தோற்றுவிட்டது என, முன்னாள் அமைச்சர் சம்பத் கூறினார்.கடலுாரில் அவர் கூறியதாவது:சாத்தனுார் அணைக்கு வரும் உபரி நீரை, முன்னதாகவே சிறிது சிறிதாக திறந்திருக்கு வேண்டும். தி.மு.க., அரசுக்கு இதில் கவனம் இல்லை. உடனடியாக 1.70 லட்சம் கன அடி உபரி நீரை முன்னறிவிப்பு இன்றி திறக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை அப்புறப்படுத்தவில்லை. திடீரென்று தண்ணீர் சூழ்ந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். உடமைகள் சேதமடைந்துள்ளன.அ.தி.மு.க., ஆட்சியில், கடலுார் தென்பெண்ணை ஆற்றின் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி எவ்வளவு நீர் வந்தாலும் அதை கடலில் கலக்க செய்தோம். தி.மு.க., அரசு செய்ய தவறிவிட்டது.தானே புயலின்போது, 12 அமைச்சர்களையும், 2015ல் பெருமழை, பெருவெள்ளம் வந்தபோது 8 அமைச்சர்களையும் ஜெ., அனுப்பி நிவாரண பணிகளை மேற்கொண்டார். தி.மு.க., அரசில் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை. துணை முதல்வர் வந்து பார்வையிட்டு சென்றரே தவிர பாதிக்கப்பட்ட பகுதி இயல்பு நிலைக்கு வர நடவடிக்கை இல்லை.புதுச்சேரியில் நிவாரண நிதியாக 5000 ரூபாய் அறிவித்துள்ளனர். தமிழக அரசு 2000 அறிவித்துள்ளது போதாது. 6 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்.விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களை சந்திக்க ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காப்பதில் தி.மு.க., அரசு தோற்றுவிட்டது. இவ்வாறு சம்பத் கூறினார்.