உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மழையில் மூழ்கிய நெல் வயல்கள் : கணக்கெடுப்பு பணி எப்போது?

 மழையில் மூழ்கிய நெல் வயல்கள் : கணக்கெடுப்பு பணி எப்போது?

கடலுார்: மாவட்டத்தில் 'டிட்வா' புயலால் பெய்த கனமழையில்மூழ்கி சேதமடைந்த நெல் வயல்களுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு பணி எப்போது துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர். இலங்கை அருகே உருவான 'டிட்வா' புயல் தமிழக கடற்கரையை நெருங்கியதால் தமிழகத்தில் கடந்த, நவ.,26ம் தேதி முதல் தொடர் மழை பெய்து வந்தது. தென் மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் கடலுார் மாவட்டத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இளம்பயிராக இருந்த வயல்கள் முழுதும் அழுகிவிட்டன. கதிர் பருவத்தில் இருக்கும் பயிர்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. கடலுார் மாவட்டத்தை பொருத்தவரை காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாதோப்பு, கடலுார் போன்ற பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்கும் என்று வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். தற்போது 'டிட்வா' புயல் வலுவிழந்து ஒரு வாரத்திற்குமேல் ஆகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் இன்னும் கணக்கெடுப்பு பணி துவங்கவில்லை. டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு விவசாய நிலங்களில் பயிர் வகைகள், விவசாயிகளின் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மின் மயமாக்கும் வகையில் 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஆண்டுக்கு மூன்று முறை டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள 'கிராப் சர்வே' மொபைல் போன் செயலியில் தகவல்களை சேகரித்து ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் நடக்கின்றன. இந்த தகவல்கள் துல்லியமாக இல்லை என கருதிய தமிழக அரசு வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறையினரையும் வேளாண் கல்லுாரி மாணவர்களையும், ஈடுபடுத்தி வருகிறது. இதனால் கிராம நிர்வாக அதிகாரிகள், வேளாண் அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து நடத்த அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தென் மாவட்டங்களில் வருவாய்த்துறையினரும், வேளாண் துறையினரும் ஒத்துப்போகாததால் கணக்கெடுப்பு நடத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. தற்போது நிலத்திற்கு செல்வதை விட, 50 மீ., துாரத்திலாவது நின்று கணக்கெடுப்பு நடத்த செயலியை திருத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் இன்னும் கணக்கெடுப்பு பணி துவங்கப்படவே இல்லை. எப்போது கணக்கெடுப்பு பணி துவங்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ