மழைநீர் வடியாததால் மக்கள் அவதி
கடலுார்: கடலுாரில் கடந்த 21ம் தேதி 17.9 செ.மீ., அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதில் கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் கிராமத்தில், பாபா நகர் விரிவாக்கம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. அதை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் வீடுகளில் தங்க முடியாமல், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஒவ்வொரு மழையின் போதும், இப்பகுதியில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளதால், அதை தடுப்பதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.