கருவூலம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
வேப்பூர் : வேப்பூர் தாலுகா உருவாகி 12 ஆண்டுகளாகியும் கருவூலம் இல்லாததால், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அவதியடைகின்றனர்.விருத்தாசலத்தில், வேப்பூர் பிர்காவில் 32 கிராமங்களையும், திட்டக்குடியில், சிறுபாக்கம் பிர்காவில் 21 கிராமங்களையும் பிரித்து, கடந்த 2013ல் வேப்பூர் தாலுகா உருவாக்கப்பட்டது. வேப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கட்டடத்தில் தாலுகா அலுவலகம் இயங்குகிறது.தாலுகா அலுவலக வளாகத்தில் போதிய இடம் இருந்தும், 12 ஆண்டுகளாக இதுவரை கருவூலம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால், வேப்பூர் தாலுகாவிற்குட்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியர் பென்ஷன், வருவாய் கிராமங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை, பொது மக்கள் நில அளவைக்கு பணம் செலுத்த 25 கி.மீ., துாரம் உள்ள விருத்தாசலம் கருவூலத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், கால விரயம், கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. எனவே, வேப்பூர் தாலுகாவில் அரசு கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.