பெட்ரோல் பங்க் சேதம் ஊழியர் கைது
திட்டக்குடி: பெட்ரோல் பங்கை சேதப்படுத்திய ஊழியரை போலீசார் கைது செய்தனர். திட்டக்குடியைச் சேர்ந்தவர் இளவழகன், 70; இவரது பெட்ரோல் பங்கில், தி.இளமங்கலம் நித்தியானந்தம், 29; என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பெட்ரோல் பங்கிற்கு, குடி போதையில் வந்த அவர் உரிமையாளர் இளவழகனிடம் விடுமுறை கேட்டார். மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த நித்தியானந்தம் பெட்ரோல் பங்கில் இருந்த கம்பியால் அலுவலக அறை கண்ணாடி மற்றும் அங்கிருந்த பைக்கை சேதப்படுத்தி, தப்பிச் சென்றார். புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து, தப்பிச்சென்ற நித்தியானந்தத்தை கைது செய்தனர்.