உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதைப்பொருள் தடுப்பு எஸ்.ஐ., மீது தாக்குதல் திட்டமிட்ட செயலா என போலீஸ் விசாரணை நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா நபர்கள் அட்டகாசம்

போதைப்பொருள் தடுப்பு எஸ்.ஐ., மீது தாக்குதல் திட்டமிட்ட செயலா என போலீஸ் விசாரணை நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா நபர்கள் அட்டகாசம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்ய சென்ற சப் இன்ஸ்பெக்டர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் கலால் பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக தவசெல்வம் பணியாற்றி வருகிறார். இவர், போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவிலும் கூடுதலாக பணியாற்றுகிறார்.போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதில் சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் தீவிரம் காட்டி வருகிறார். இவரது தலைமையிலான போலீசார், மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா, குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பவங்களை தடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.நேற்று, கடலுார் பகுதியில் தவசெல்வம் தலைமையிலான போலீசார் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை பிடித்து தங்களது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கிளம்பியுள்ளனர். அப்போது அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டி காலனியில் ஒருவர் 8 கிலோ கஞ்சாவை தனது வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக கூறி, வீட்டின் அடையாளத்தையும் கூறியுள்ளார்.அதையடுத்து, தாங்கள் பிடித்து வைத்திருந்த 2 குற்றவாளிகளுடன் தவசெல்வம் தலைமையிலான 6 போலீசார் மர்ம நபர் சொல்லிய இடத்துக்கு உடனடியாக சென்றனர்.ஜீப்பில் குற்றவாளிகள் இருப்பதால், தன்னுடன் வந்த போலீசாரை அவர்களை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, காவலர் தனவேலை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம் சென்றுள்ளார். குறிப்பிட்ட அந்த வீட்டில் இருந்த ஒருவரை அழைத்து தவசெல்வம் விசாரித்துள்ளார். உடனே அந்த நபர் கூச்சல் போட்டுக் கொண்டே ஓடியுள்ளார்.தவசெல்வம் மற்றும் போலீசார் சீருடையில் செல்லாமல் சாதாரண உடை அணிந்து சென்றிருந்தனர். இதனால் வந்திருப்பது போலீஸ் என தெரியாததால், நமது ஊரை சேர்ந்தவரை யாரோ தாக்குகிறார் என நினைத்து 100க்கும் மேற்பட்டோர் சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வத்தை சுற்றி வளைத்து தாக்கினர்.அதிர்ச்சியடைந்த காவலர் தனவேல், தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதை நம்பாத மக்கள், தொடர்ந்து தவசெல்வத்தை தாக்கினர். இதில் அவரது டி -சர்ட் கிழிந்தது.தகவலறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் நெல்லிக்குப்பம், திருப்பாதிரிபுலியூர் போலீசார் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீசார் வருவதை கண்டதும், சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வத்தை தாக்கியவர்கள் தப்பியோடினர்.சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வத்துக்கு போன் செய்த நபரின் மொபைல் போன் நம்பரை கொண்டு, அவர் யார்? சொல்லிய தகவல் உண்மையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.எஸ்.ஐ. தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அதே ஊரை சேர்ந்த ஆனந்தகுமார்,48, என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சப் இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை