டாஸ்மாக் சரக்கு லாரிக்கு போலீசார் பாதுகாப்பு
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பைபாஸ் ரோடு அருகில் டாஸ்மாக் சரக்கு ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பைபாஸ் ரோடு அருகில் ஒரே இடத்தில் வரிசையாக மூன்று அரசு டாஸ்மாக் கடை உள்ளன. கடலுார் குடோனில் இருந்து டி,என் 55 ஆர் 9921 என்ற லாரி டாஸ்மாக் மதுபானம் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு காட்டுமன்னார்கோவில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சரக்கு இறக்க மதியம் 3 மணிக்கு வந்தது. அப்போது லாரி பள்ளத்தில் சிக்கி சாய்ந்தது. இதனால் லாரியை எடுக்க முடியாததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை அருகில் இருப்பதால், அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் டாஸ்மாக் மதுபானம் ஏற்றி வந்த லாரியை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின் பொக்லைன் இயந்திரம் மூலம் மாலை 5 மணிக்கு லாரியை மீட்கப்பட்டு, கடையில் டாஸ்மாக் சரக்கை இறக்கிவிட்டு லாரியை போலீசார் அனுப்பி வைத்தனர்.