போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பம்: வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் ரம்ஜான் நோன்பின் 27ம் நாளை முன்னிட்டு போலீசார் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாழப்பட்டு அருகே காவலர்கள் மாயவேல், அறிவழகன் ஆகியோர் வேகமாக பைக்கில் வந்த ஷர்பியா நகரை சேர்ந்த முகமது கவுசிக்கை,22; சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.அவர் நிறுத்தாமல் சென்றதால் போலீசார் தாக்கினர். இந்நிலையில், முகமது கவுசிக்கை லத்தியால் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.