பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல் விழா; வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு
கிள்ளை; பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நடந்த பொங்கல் விழாவில் நேற்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் நேற்று கடலுார் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கிள்ளை பேரூராட்சிஇணைந்து, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க., நகர செயலாளர், துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் தலைமை தாங்கி, பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். சேர்மன் மல்லிகா முன்னிலை வகித்தார். கடலுார் மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன் வரவேற்றார்.பொங்கல் விழாவில் பங்கேற்ற ரஷ்யா நாட்டை சேர்ந்த 18 சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளித்து நம்முடைய பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் விழா மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.அங்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி போட்டி என பல்வேறு போட்டிகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். விழாவில், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், சுற்றுலா மைய மேலாளர் பைசல், தலைமை எழுத்தர் செல்வராஜ் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.