கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்கு அலைகழிப்பு; தனியார் ஸ்கேன் சென்டருக்கு அனுப்பும் அவலம்
மாவட்டத்தில், அரியலுார் மாவட்டத்தையொட்டி உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரை, ரத்த அழுத்தம், பிரசவம், தடுப்பூசி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவ்வாறு மாதந்தோறும் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை டாக்டர்கள் பரிசோதனை செய்து, குழந்தை வளர்ச்சி, சத்து குறைபாடு குறித்து பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கி, மருந்து, மாத்திரைகள் வழங்குவது வழக்கம்.ஆனால், இங்கு பணிபுரியும் டாக்டர் ஒருவர் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை பரிசோதித்து, ஸ்கேன் எடுக்க விருத்தகிரீஸ்வரர் நகரில் உள்ள மூனு ஸ்கேன் சென்டருக்கு செல்லுமாறு பரிந்துரை செய்து வருகிறார். இதனால் வறுமையில் உள்ள கர்ப்பிணிகள் செய்வதறியாது, புலம்புவதுடன் கடன் வாங்கி தனியார் ஸ்கேன் சென்டருக்கு செல்லும் அவலம் தொடர்கிறது.இதுகுறித்து, வட்டார மருத்துவ அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளை பரிசோதித்து, அவர்களின் குழந்தை வளர்ச்சி குறித்து இங்கு தான் ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் மெஷின் பழுதானால் அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் இருந்து எடுத்து வந்து ஸ்கேன் செய்ய வேண்டும். சிக்கலான கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யலாம். தனியார் ஸ்கேன் சென்டருக்கு பரிந்துரை செய்வது கண்டிக்கத்தக்கது' என்றார்.