உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு... எதிர்ப்பு; வாகனங்களை தடுத்து மக்கள் போராட்டம்

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு... எதிர்ப்பு; வாகனங்களை தடுத்து மக்கள் போராட்டம்

கடலுார்: கடலுார் மாநகரில், பாதாள சாக்கடை திட்டம் இரண்டாம் கட்ட பணிக்காக,கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் விரிவாக்கம் செய்ய தேவனாம்பட்டினம் மக்கள்எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலுார் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. அவற்றில், 40 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள 10 வார்டுகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்த திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளன.கடலுார் மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடலுார் தேவனாம்பட்டினத்தில் உள்ளது. கடலுார் நகரம் முழுதும் சேகரிக்கப்படும் திடக்கழிவை பம்ப் செய்து தேவனாம்பட்டினம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு திறந்த வெளியில் உள்ள பிரத்யேக பகுதியில் நிரப்பப்பட்டு இயந்திரங்களால் சுத்திகரிப்பு செய்யப்படும்.தற்போது மாநகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பைப் லைன்கள் போடப்பட்டாலும், அதற்கு வீடுகளில் இருந்து இணைப்பு கொடுத்திருப்பது ஒரு குறிப்பிட்ட அளவுதான் உள்ளது. பல இடங்களில் பணம் செலுத்தி பைப் லைன் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் பணம் செலுத்தாத வீட்டின் உரிமையாளர்கள் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு பெறாமல் உள்ளனர்.மாநகராட்சி தற்போது சொத்து வரி, பாதாள சாக்கடை வரி போன்றவற்றை வசூல் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. அதையொட்டி, தற்போது பாதாள சாக்கடைத்திட்ட இணைப்புகள் கூடுதலாக கொடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சேகரிக்கும் திடக்கழிவுகள் 7 பம்பிங் நிலையம், 12 பூஸ்டர் என, மொத்தம் 19 மோட்டார் மூலம் பம்ப் செய்யப்படுகிறது. தற்போது திடக்கழிவு கூடுதலாக சேகரிக்கப்பட்டு வருவதால் கூடுதலாக பம்பிங் செய்ய வேண்டியுள்ளது.எனவே, சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதையொட்டி, அதற்குரிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நேற்று காலை தேவனாம்பட்டினம் எடுத்துச்செல்லப்பட்டது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் இங்கு சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கூடாது என வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு ஏற்கனவே கூறியபடி சுனாமி குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.இது குறித்து தகவலறிந்த கடலுார் டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேவனாம்பட்டினம் மக்கள் ஏற்காததால், இது குறித்து தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என போலீசார் கூறியதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ