பண்ருட்டி- கோவை பஸ்களை இயக்க கோரிக்கை
பண்ருட்டி: பண்ருட்டியில் இருந்து கோயம்புத்துாருக்கு பஸ்களை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. பண்ருட்டியில் இருந்து நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாசலம், வேப்பூர், தலைவாசல், ஆத்துார், சேலம், ஈரோடு வழியாக கோயம்புத்துாருக்கு செல்ல, அரசு பஸ் (தடம் எண் : 194) இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த ஓராண்டாக, நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கடலுாரில் இருந்து ஈரோடு, திருச்செங்கோட்டுக்கு செல்லும், அரசு பஸ் (தடம் எண்: 282) கடந்த 7 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டியில் இருந்து சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, கோயம்புத்துார் உள்ளிட்ட பகுதியில் பள்ளி, கல்லுாரிக்கு செல்வதற்காக மாணவர்கள் தினந்தோறும் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர். பண்ருட்டியில் இருந்து ஆத்துார் சென்று பின் பஸ் மாறி செல்லும் நிலை உள்ளது. அதனால், அரசு போக்குவரத்து அதிகாரிகள் பண்ருட்டியில் இருந்து கோயம்புத்துார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.