உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.8 கோடி விரிவாக்கப்பட்ட சாலை; விரிசல் விழுந்ததால் பரபரப்பு

ரூ.8 கோடி விரிவாக்கப்பட்ட சாலை; விரிசல் விழுந்ததால் பரபரப்பு

விருத்தாசலம்; விருத்தாசலம் புறவழிச்சாலையில் 8 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட சாலையில் விரிசல் விழுந்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் வழியாக சென்னை, விழுப்புரம், திருச்சி, கும்பகோணம், வேலுார், சேலம், கடலுார், புதுச்சேரி உட்பட பல பகுதிகளுக்கு ஆயிரக்கணக் கான வாகனங்கள் செல்கின்றன. இதற்காக, விருத்தாசலம் நகருக்கு வெளியே 10 ஆண்டுகளுக்கு முன் புறவழிச்சாலை போடப்பட்டது. இதன் மூலம் கடலுார் - திருச்சி, சேலம் - சிதம்பரம் மார்க்க வாகனங்கள் நெரிசலின்றி சென்று வருகின்றன.இந்நிலையில், விருத்தாசலம் புறவழிச்சாலையில் சித்தலுார் ரவுண்டானாவில் அதிக விபத்துகளை தவிர்க்கும் வகையில், ஒன்னரை ஆண்டுகளுக்கு முன் 2 கோடி ரூபாயில் விரிவாக்கப் பணிகள் நடந்தது. அதைத் தொடர்ந்து, ரவுண்டானாவில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி மார்க்கத்தில், 1 கி.மீ., தொலைவிற்கு 8 கோடி ரூபாயில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது.இதற்காக, சாலையின் இருபுறம் முற்றிலுமாக தோண்டப்பட்டு, அகலப்படுத்தும் பணி நடக்கிறது. அப்போது புதிதாக கல்வெர்ட் அமைத்தல், மின் கம்பங்கள் இடமாற்றம், வடிகால் அமைத்தல் மற்றும் வேடப்பர் கோவில் முன் ராட்சத கல்வெர்ட் கட்டும் பணிகள் நடந்தது. சாலை விரிவாக்கப் பணியால் விபத்துகள் குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், சித்தலுார் ரவுண்டானாவில் இருந்து வேடப்பர் கோவில் வரை 1 கி.மீ., வரையிலான விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில், ஆங்காங்கே விரிசல் விழுந்தன. ஒரு கி.மீ., தொலைவிற்கு 8 கோடி ரூபாய் செலவழித்தும், பயனில்லையே என வாகன ஓட்டிகள் புலம்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை