குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளால் சாலைகள் சேதம்
நெல்லிக்குப்பம்; மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப் பணி நீண்ட நாட்களாக நடப்பதால் சாலைகள் சேதமாகியுள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்காம் பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி கடந்த 2022ம் ஆண்டு துவங்கியது. பேரூ ராட்சி பகுதி முழுவதும் மெயின் பைப் லைன் புதைத்து, அதில் இருந்து 1,800 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்தது. பைப் லைன் புதைக்கும் பணி பெரும்பான்மையான இடங்களில் முடிந்திருந்த நிலையில் சாலைகள் சேதமானது. இதற்கிடையே, குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை ஆய்வு செய்ய வந்த பேரூராட்சி செயற் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மெயின் பைப்பில் இருந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பைப்புகள் தரமில்லாததால் அவற்றை மாற்ற உத்தரவிட்டார். இதனால் மீண்டும் வீட்டுக்கு வீடு பள்ளம் தோண்டப்பட்டு பழைய பைப்பை மாற்றி புதியதாக தரமான பைப்புகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதன் காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் சிரமபடுகின்றனர். பைப் அமைக்கும் பணி முடிந்தால்தான் சாலை பணியை மேற்கொள்ள முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பைப் லைன் அமைக்கும் பணியை விரைந்து முடித்து சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வே ண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.