உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 2.40 கோடியில் குளங்கள் துார்வாரும் பணி

ரூ. 2.40 கோடியில் குளங்கள் துார்வாரும் பணி

மாவட்டத்தில் தென்பெண்ணை, கெடிலம், மணிமுக்தா, வெள்ளாறு, கொள்ளிடம், பரவனாறு போன்ற ஆறுகளும்; வீராணம், பெருமாள், வெலிங்டன், வாலாஜா போன்ற ஏரிகளையும் உள்ளடக்கியது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சிறப்பாக இருந்த நிலையில் ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியது, தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சியது போன்ற காரணங்களால் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது.நீர்நிலைகளில் நீர்வரத்து குறைந்து, போர்வெல்கள் செயலிழந்து குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் ஏரி, குளங்களை துார்வாரி நீர்ப்பிடிப்பை ஏற்படுத்தும் வகையில் வண்டல் மண் அள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் விவசாய பயன்பாட்டை தவிர்த்து ரியல் எஸ்டேட் மனைகளை சமன்செய்யும் சட்ட விரோத செயலே நடக்கிறது.இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் குளங்களை துார்வார முடிவு செய்யப்பட்டது. அதன்படி கருவேல மரங்கள் மண்டி, துார்ந்து கிடந்த நாச்சியார்பேட்டை முத்து மாரியம்மன் கோவில் குளம் மற்றும் தாமரை குளம், பெரியார் நகர் நாச்சியார் குளம், வயலுார் மற்றும் பூதாமர் குளங்களை 2.40 கோடி ரூபாயில் துார்வாரும் பணி தீவிரமாக நடக்கிறது.பொதுமக்கள், கால்நடைகள் பயன்படுத்தும் வகையில் படிக்கட்டுகள், கரையை சீரமைத்து நடைபாதை, மின் விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. ஓரிரு வாரங்களில் சீரமைப்பு பணிகள் முடிந்து விடும் என்பதால், வடகிழக்கு பருவமழையை முழுமையாக சேமிக்க முடியும். இதன் மூலம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் சரியாமல் பாதுகாக்க முடியும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ