ஆற்றில் குளித்த வாலிபரின் உடலை தேடும் பணி 5வது நாளாக நீடிப்பு
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஆற்றில் குளித்தவர் ஆற்றில் ஆழமான சிக்கி கொண்டதால் தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையம் கிராமம், ஆற்று தெருவை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மகன் வேலன்,18; 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை; இவர் கடந்த 10ம் தேதி கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றின் வீராணம் பைப்லைன் பகுதியில் நண்பர்கள் 4 பேருடன் ஆற்றில் குளித்தார். அப்போது ஆழமான பகுதியில் வேலன் சிக்கி கொண்டார். கடந்த 5 நாட்களாக பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் 30பேரும் தேடிவந்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் பண்ருட்டி, புதுப்பேட்டை போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேரும், மாநில மீட்பு குழுவினர் வேளாங்கன்னியில் இருந்து 50 பேரும் கடந்த 3 நாட்களாக தேடி வந்தனர். ஆனால் நேற்று மாலை 6:00 மணிவரை உடல் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று புதுப்பேட்டை போலீசில் தீனதயாளன்,50; கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து வேலன் உடலை தேடி வருகின்றனர்.