மலிவு விலையில் போலி உரம் விற்பனையா? மாவட்டத்தில் விவசாயிகள் அதிர்ச்சி
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மதுராந்தகநல்லுார் கிராமத்தில் கடந்த 20ம் தேதி வெளி மாவட்டத்திலிருந்து டாடா ஏஸ் வாகனத்தில் உர மூட்டைகளை கொண்டுவந்து, விவசாயிகளிடம் மலிவு விலையில் பாக்டம் பாஸ் உரம் என விற்பைனை செய்தனர். இந்த உரம் மீது சந்தேகம் எழுந்ததால், அப்பகுதியை சேர்ந்த விவசாயி சிவநேசன் என்பவர் தெரிவித்த வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், கீரப்பாளையம் வேளாண் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அந்த உரத்தை பரிசோதனை செய்ததில், களிமண் உருண்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட உரம் போன்ற பொருள் என தெரிந்தது. அதையடுத்து, உர மூட்டைகளிலிருந்து மாதிரி எடுத்து திருச்சியில் உள்ள உர ஆய்வகத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வேளாண் அதிகாரிகள் கொடுத்த புகாரில், போலி உரம் விற்றதாக தஞ்சாவூர் கந்தபிரபு, விருத்தாசலம் பகுதியை சேர்ந்த விஜயரங்கன், பச்சமுத்து ஆகியோரை ஒரத்துார் போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து விசாரணையில், கடலுார் மாவட்டத்தில் உள்ளூர் புரோக்கர்கள் உதவியுடன் வெளி மாவட்டங்களிலிருந்து போலி உரம் கொண்டு வந்து மலிவு விலையில் விவசாயிகளிடம் விற்பனை செய்து வருவதும், உரம் விலை அதிகரித்துள்ள நிலையில் மலிவு விலையில் உரம் கிடைப்பதால், அதனை வாங்கி விவசாயிகள் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடந்து வருவதாக தெரியவந்தது.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதேபோல சாத்தமங்கலம் கிராமத்தில் வெளிமாவட்டத்திலிருந்து டாடா ஏஸ் வாகனத்தில் போலி உர மூட்டைகளை ஏற்றி வந்து விவசாயிகளிடம் விற்க முயன்றபோது வேளாண் அதிகாரிகள் கையும் களமாக பிடித்தனர்.இதுபோன்ற சம்பவங்கள் மாவட்டம் முழுவதும் நடந்துள்ளதால், போலி உரம் விற்பனையை, கடும் நடவடிக்கை மூலம் மாவட்ட நிர்வாகம் தடுக்க முன்வர வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.