சில்வர் பீச் சுற்றுலா தலமாக மாற்றப்படும்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி விரைவில் துவங்கும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கிள்ளை குச்சிபாளையத்தில் உள்ள சொக்கன் ஓடை தடுப்பணை சேதமடைந்ததால் புதிய தடுப்பணை கட்ட தமிழக அரசு ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து நேற்று பூமி பூஜை நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். சப் கலெக்டர் கிஷான்குமார், கிள்ளை சேர்மன் மல்லிகா, கொள்ளிடம் வடிநில கோட்ட பொறியாளர் காந்தரூபன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம், புதிய தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டினார்.பின், அவர் பேசியதாவது: சொக்கான் ஓடையில் தடுப்பணை கட்டுவதன் மூலம், 2,450 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, கடல் நீர் உட்புகாமல் தடுக்கப்படும். கொள்ளிடத்தில் ரூ.90 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி விரைவில் துவங்கும். பிச்சாவரம், சாமியார்பேட்டை, கடலுார் சில்வர் பீச் ஆகியவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.தனி நபர்கள் அதிகளவில் பயன்பெறும் அளவிற்கு பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வகுத்துள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றார்.விழாவில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கலையரசன், முத்துப்பெருமாள், மனோகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், பொதுப்பணிதுறை உதவி பொறியாளர்கள் பார்த்திபன், ரமேஷ், கவுன்சிலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.