கடலுார் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை குறைவு! தமிழகத்தில் மொத்தமாக 325 மி.மீ., பதிவானது
கடலுார்: தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்தாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைவாகவே மழை பதிவானது. தமிழகத்தில் அக்.,-நவ.,-டிச., மாதங்களில் வடகிழக்கு பருவ காற்றின் மூலம் மழை கிடைக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஜூன், ஜூலை, ஆக., செப்., மாதங்கள் பருவ மழைக்காலங்களாகும். இப்பகுதிகளில் பெய்கின்ற அதிகமான மழைதான் தமிழகத்தில் உள்ள மேட்டூர், சாத்தனுார் அணைகளுக்கு வருகின்றன. அதிகளவு மழை பெய்யும் இம்மாநிலங்களில் இருந்து தான் காவிரி நீரை போராடி கேட்டு பெறுகிறோம். தென்மேற்கு பருவ காற்றில் இருந்து தப்பி வரும் மேக கூட்டங்களால் தான் தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பொழிவு இருக்கும். தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி துவங்கி, செப்., 30ம் தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த பருவ காற்று முற்றிலும் வாபஸ் பெற்றால்தான் அக்., 2வது வாரம் வரை காலம் எடுத்து கொண்டாலும், செப்., வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய இயல்பான மழை அளவு 328 மி.மீ., ஆகும். அதன்படி தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதியில் இருந்து செப்., 30ம் தேதி வரையிலான நிலவரப்படி, 325 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அதாவது இயல்பை விட ஒரு சதவீதம் மட்டுமே அதிகமாக மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு 2024ல் பதிவான மழை அளவு 384 மி.மீ., ஆகும். இது இயல்பை விட 19 சதவீதம் கூடுதல் ஆகும். அதே போன்று, 2023ம் ஆண்டில் 354 மி.மீ., மழை பெய்தது. இது இயல்பை விட 8 சதவீதம் கூடுதலாகும். கடந்த 2022ம் ஆண்டு பெய்த மழையளவு 477 மி.மீ., ஆகும். இது இயல்பை விட 45 சதவீதம் கூடுதலாகும். 2021ம் ஆண்டு 393 மி.மீ., கூடுதல் மழை பெய்துள்ளது. இது சராசரி மழை அளவை விட 17 சதவீதம் கூடுதலாகும். 2020ம் ஆண்டு 424 மி.மீ., மழை பெய்ததால் 24 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது என, கணக்கிடப்பட்டுள்ளது. கடலுார், திருநெல்வேலி, தென்காசி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகியுள்ளது. இம்மாதம் இறுதியில் தென் மேற்கு பருவ காற்று வாபஸ் பெறப்பட்டு வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.