நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு தபால் உறை வெளியீடு
கடலுார்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சுவாமி நடராஜர் உருவம் கொண்ட நிரந்தர முத்திரை அஞ்சல் துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.இதன் ஒரு பகுதியாக தேரோட்டத்தின் போது, அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் உறை, தேரில் வைத்து எடுத்து வரப்பட்டு, சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு வெளியிடப்பட்டது.மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜெயசங்கர் முன்னிலையில், திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் நிர்மலாதேவி, தபால் உறையை வெளியிட பொது தீட்சிதர்கள் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் மத்திய மண்டல உதவி இயக்குனர் கலைவாணி, கண்காணிப்பாளர்கள் கடலுார் கணேஷ், விருத்தாசலம் அப்துல் லத்தீப், தலைமை அஞ்சலக அதிகாரி ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.