உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிதம்பரத்தில் இன்று துவக்கம்
காட்டுமன்னார்கோவில் : தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு9:30 மணிக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வந்தார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிதம்பரம் நகர மன்ற சேர்மன் செந்தில்குமார் வரவேற்றனர். கீழ வீதியில் உள்ள தனியார் ஓட்டலின் முதல்வர் தங்கினார்.இன்று காலை 9:00 மணிக்கு மக்கள் வசிக்கும் வீட்டிற்கே சென்று குறைகளை நிவர்த்தி செய்யும், உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் பேட்டை பகுதியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார்.தொடர்ந்து இளையபெருமாள் திருவுருவச் சிலையுடன் ரூ. 6.39 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நுாற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், கணேசன், சிவசங்கர், வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐயப்பன், நெய்வேலி சபாராஜேந்திரன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். முதல்வர் வருகையை ஒட்டி சிதம்பரம் நகர பகுதி, விழா கோலம் பூண்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.