மாணவர்களின் பைக் பறிமுதல்; போலீசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்; சாகசம் செய்த மாணவர்களின் பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை கண்டித்து, விருத்தாசலம் அரசு கல்லுாரியில் ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று ஜங்ஷன் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லுாரி வளாகத்தில் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இருவரின் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், ெஹல்மெட் அணியாதது, மூவர் ஒரே பைக்கில் சென்றது உள்ளிட்ட பிரிவுகளில் 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.அன்றிரவு (நேற்று முன்தினம் இரவு) அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு, ஆவணங்களை சரிபார்த்து பைக்குகள் ஒப்படைக்கப்பட்டன. அதுபோல், கல்லுாரி மாணவர்கள் இருவரின் பெற்றோரை வரவழைத்து பைக் சாகசம் செய்வது தவறு. வாகன உரிமம் பெறாமல் பைக் ஓட்டுவதும் தவறு என அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில், கல்லுாரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களின் பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை கண்டித்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பூபதி தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று மதியம் கல்லுாரி வளாகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கல்லுாரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.