கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு கிராமங்களில் சப் கலெக்டர் ஆய்வு
சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக தீவு கிராமங்களில் சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கர்நாடகாவில் பெய்து வரும் அதிக மழையால், மேட்டூர் அணை நிரம்பியது. இதன் காரணமாக, அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருச்சி கல்லணைக்கு வந்த உபரி நீரை, கடந்த இரு நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் பொதுப்பணி துறை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த நீர், கீழணைக்கு வந்து சேர்ந்ததையடுத்து, கீழணையில் இருந்து கடலுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் இருகரை தொட்டு தண்ணீர் செல்கிறது. கொள்ளிடம் ஆற்றில் 1.25 லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து, தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கரையோர கிராம மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார், கொள்ளிடம் - பழைய கொள்ளிடம் ஆற்றில் இடையில் உள்ள, தீவு கிராமங்களான கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு ஆகிய 3 கிராமங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செ ய்தார். தொடர்ந்து, பொதுமக்கள் தங்கும் முகாம், அரிசி, மளிகை மற்றும் உணவு பொருட்கள் தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து, இரவு நேரத்தில் விழிப்புடன் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் காந்தரூபன், தாசில்தார் கீதா, குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராகிம் உடனிருந்தனர்.