கீழிஞ்சிப்பட்டு பள்ளி மாணவி சாவு; பணியில் இருந்த ஆசிரியை சஸ்பெண்டு
கடலுார் : கடலுார் தாலுகா கீழிஞ்சிப்பட்டு அரசு ஆரம்ப பள்ளியில் பயின்ற 2ம் வகுப்பு சிறுமி மயக்கமடைந்து இறந்தது தொடர்பாக அப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.கடலுார் மாவட்டம் , கடலுார் அடுத்த கீழிஞ்சிப்பட்டு அரசு ஆரம்ப பள்ளியில் 25 க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ரேவதி என்கிற ஆசிரியை ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர். கீழிஞ்சிப்பட்டு அருகே உள்ள இருளர் குடியிருப்பில் வசிக்கும் பிரியதர்ஷினி 2 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி திங்கள் கிழமை பிரியதர்ஷினி வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது பிரியதர்ஷினி சிறிது மயக்க நிலையில் இருந்துள்ளார். இதை கவனித்த ஆசிரியை ரேவதி, அக்குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பாமல் பள்ளியிலேயே படுக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வாந்தி எடுத்துள்ளார். உடன் ஆசிரியை அவரது பெற்றோருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மொபைல் போன் கிடைக்காததால் குழந்தையை அப்பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் மூலமாக வாகனத்தில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.வீட்டிற்கு சென்ற குழந்தையின் உடல் மோசமடையவே, பெற்றோர்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு மதலப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து புதுச்சேரி குழந்தைகள் மருத்துவமனையில் பிரியதர்ஷினியை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி இறந்தார். இது குறித்து தவலறிந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பற்றி உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்காததால் பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியை ரேவதி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் கேட்டபோது, இச்சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஆசிரியர் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து வந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.