சாலை போடாததால் கோவிலுக்கு பூட்டு
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் சாலை போடாததை கண்டித்து, கோவிலுக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 5 வது வார்டில் அங்காளம்மன் கோவில் அருகே சிமண்ட் சாலை போடும் பணி, 20 நாட்களுக்கு முன்பு துவங்கியது. சாலை போடும் இடம் கோவிலுக்கு சொந்தமானது என கூறி, சாலைபோட கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணி நிறுத்தப்பட்டது.சாலை பணியை நிறுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கவுன்சிலர் சரவணன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்மாறன் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை போடாததை கண்டித்து, கோவிலுக்கு பூட்டு போட்டு பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பக்தர்கள் கோவிலை சுற்றி வர போதுமான இடம் விட வேண்டும். சாலையை உயரமாக போடக்கூடாது. சாலை போடுவதால் அந்த இடத்தை மக்கள் சொந்தம் கொண்டாட கூடாது. இதற்கு சம்மதித்தால் சாலை போட அனுமதிப்பதாக கோவில் நிர்வாகிகள் கூறினர். அதை பொதுமக்கள் ஏற்றதால் சாலை போட கோவில் நிர்வாகத்தினர் சம்மதித்தனர். இதனால் கோவில் திறக்கப்பட்டது.