உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கெடிலம் பாலத்தின் இணைப்பு சாலை பணி கிடப்பில்.. விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை

கெடிலம் பாலத்தின் இணைப்பு சாலை பணி கிடப்பில்.. விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றில் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட பாலத்தின் இணைப்பு சாலை பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி-பாலுார் இடையில் நடுவீரப்பட்டு கெடிலம் ஆற்றின் குறுக்கே கடந்த 1967ம் ஆண்டு 16 கண்கள் கொண்ட உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம், பத்திரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடலுாருக்கும், பாலுார், குயிலாப்பாளையம், முத்துகிருஷ்ணாபுரம், பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் குறிஞ்சிப்பாடி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிக ளுக்கும் சென்று வருகின்றனர். இந்த பாலம் கட்டப்பட்டு 58 ஆண்டுகள் கடந்து விட்டதால்,பாலம் வலுவிழந்தும், மழைகாலத்தில் மழைநீர் பாலத்தின் மீதும் ஓடியது. பாலத்தின் மீது மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் 10 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2023ம் ஆண்டு நவ., 6ம் தேதி நபார்டு திட்டத்தின் கீழ் 19 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட, கட்டுமான பணிகள் துவங்கியது. பாலம் கட்டுமான பணிகளை 25 மாதங்களில் முடிக்க திட்டமிடப் பட்டது. கட்டுமான பணிகள் கடந்த மார்ச் மாதம் முழுமையாக முடிவடைந்தது. பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்து வரும் நவம்பர் மாதம் திறக்க வேண்டும். ஒப்பந்த காலம் முடிவடைய 20 நாட்களே உள்ள நிலையில், இணைப்பு சாலைகள் பணிகள் இதுவரை துவங்கவில்லை. இணைப்பு சாலை அமைய உள்ள இடத்தின் உரிமையாளர்களிடம் இருந்து இடத்தை கையகப்படுத்தும் பணியே இன்னும் துவங்கவில்லை. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் மழைநீர் பழைய பாலத்தின் மீது ஓடினால், மீண்டும் சுற்றிக்கொண்டு தான் செல்ல வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, இணைப்பு சாலை பணிகளை துவங்கிட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை