நரியன் ஓடையில் சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நரியன் ஓடையில் சீமை கருவேலமரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையில் நரியன் ஓடை உள்ளது. இந்த ஓடை பத்திரக்கோட்டை சுற்று பகுதியில் இருந்து துவங்கி நடுவீரப்பட்டு வழியாக கெடிலம் ஆற்றில் இணைகிறது. ஓடையின் துாரம் 3,500 மீட்டர். ஓடையில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் மழைநீர் தடையின்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக மழைநீர் தேங்கி நின்றதில் யாதவர் வீதியில் கட்டப்பட்ட தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. நடுவீரப்பட்டு கீழ்செட்டிதெரு, சி.என்.பாளையம் யாதவர் வீதி உள்ளிட்ட பல இடங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. சி.என்.பாளையம் கிராம மக்கள் நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு செல்ல யாதவர் வீதி வழியாக இந்த ஓடையில் இறங்கி செல்வது வழக்கம். ஆனால், இந்த வழி தற்போது, புதர்மண்டி காணப்படுவதால் அருகில் உள்ள ஒரு கிலோ மீட்டர் துாரம் கடந்து பாலம் வழியாக நடுவீரப்பட்டிற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்ட செயற் பொறியாளரிடம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மனு அளித்தனர். கடந்தாண்டு பிப்., மாதம் பொது ஏலம் விடப்பட்டு கருவேல மரங்கள் அகற்றப்படும் என அதிகாரிகள் கடிதம் கொடுத்தனர். ஆனால் ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித வேலையும் நடக்காமல் உள்ளது.இதனால் வரும் மழைகாலத்தில் மழைநீர் ஓடுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் நரியன் ஓடையில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.