நடு வழியில் திடீரென நின்ற ரயில்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே ரயில் திடீரென நின்றதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரத்தில் இருந்து நேற்று காலை மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் நெல்லிக்குப்பம் வழியாக கடலுார் சென்றது. நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட் பகுதியில் ரயில் வருவதால் கேட் மூடப்பட்டது. காலை 7:00 மணிக்கு அந்த கேட்டை ரயில் கடந்து சென்றது. ரயிலின் பாதி பெட்டிகள் கேட்டை கடந்த ரயில் திடீரென நின்றது. பச்சை சிக்னல் எரிந்தும் ரயில் நின்றதால் அதிர்ச்சி அடைந்த கேட் கீப்பர் ரயில் இன்ஜினை நோக்கி ஓடினார். பயணிகளும், கேட் போடப்பட்டதால் காத்திருந்த வாகன ஓட்டிகளும் குழப்பம் அடைந்தனர். ஆனால் 3 நிமிடத்தில் தானாகவே ரயில் கிளம்பி சென்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திடீரென ரயில் எதற்காக நின்றது என ரயில்வே அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.