வேளாண் அமைச்சர் தொகுதியிலேயே விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை
நடுவீரப்பட்டு : வேளாண் அமைச்சர் தொகுதியிலேயே விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை என பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறினார். கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சி மலையடிக்குப்பத்தில் 65 ஹெக்டேர் அரசு தரிசு இடத்தை அப்பகுதியை சேர்ந்த 84 பேர் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பை கடந்த 29ம் தேதி வருவாய் துறையினர் அகற்றினர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று நடுவீரப்பட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மலையடிக்குப்பத்தில் நிலங்களை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார். அதற்கு, போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி அஸ்வத்தாமன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது அவர் பேசுகையில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தொகுதிலேயே விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை. விளை நிலத்தில் பயிரிடப்பட்ட முந்திரி மரங்களை அகற்ற பொக்லைன் இயந்திரத்தை அனுப்பிய அரசு, 'பெஞ்சல்' புயலால் பாதித்த மக்களுக்கு உதவவும், ஆற்றின் கரைகளை பலப்படுத்தவும் பொக்லைனை, அனுப்பவில்லை.இங்கு முந்திரி மரங்களை அகற்றிவிட்டு தோல் தொழிற்சாலை கொண்டு வர முயற்சிக்கின்றனர். தொழிற்சாலை வந்தால் குடிநீர் மாசுபடும். சுற்றியுள்ள கிராமங்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காது. எங்களை மீறி முந்திரி மரங்களை இனி அகற்ற முடியாது. தொழிற்சாலை வந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.வரும் சட்டசபை தேர்தலில் கடலுார் மாவட்டத்தில் சொரணை உள்ள யாரும் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க மாட்டார்கள் என்றார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.