பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள்... 1,28,296 பேர்
கடலுார் கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை 6 லட்சத்து 50 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கியுள்ளனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம் பெற்றிருந்தது. பணமும் சேர்த்து வழங்கப்பட்டதால், கடந்த ஆண்டுகளில், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.இந்தாண்டு பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் 2.21 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 9ம் தேதி துவங்கியது.கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் என, 10 தாலுகா உள்ளன. மாவட்டம் முழுதும் 1,416 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டத்தில் அந்தந்த ரேஷன் கடைகள் மூலமாக 7,78,296 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த 9ம் தேதி பணிகள் துவங்கியது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி 6 லட்சத்து 50 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியுள்ளனர். மீதமுள்ள 1 லட்சத்து 28 ஆயிரத்து 296 பேர் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில், ' பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கியிருந்தால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கியிருப்பார்கள். ஆனால், இந்த முறை பணம் வழங்காததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர். மீதமுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என்றார்.