லாரி டயர் வெடிப்பு டிரைவர் காயம்
புவனகிரி : புவனகிரி அருகே லாரி டயர் வெடித்து அரசு பஸ் மீது மோதியதில் டிரைவர் காயம் அடைந்தார். புவனகிரி அடுத்த தலைகுளத்தில் இருந்து உடையூர் வழியாக சிதம்பரத்திற்கு அரசு டவுன் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. வாண்டையான்குப்பம், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்,28; என்பவர் பஸ்சை ஓட்டினார். உடையூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்ததும் பயணிகள் இறங்கினார். இதையடுத்து பஸ் சிறிது துாரம் சென்ற போது, பின்னால் வந்த லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது. இதில், பஸ்சின் பின்பக்கம் சேதமானது. லாரி டிரைவர் மணிகண்டன் காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.