ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் விதிமீறல் நேதாஜி சாலையில் போக்குவரத்து நெரிசல்
கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் நேதாஜி சாலையில் ஒரு வழிப்பாதையை கடைபிடிக்காத வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடலுார்-புதுச்சேரி பிரதான சாலையாக இருந்த மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு புதுச்சேரி செல்லும் வாகனங்கள் செம்மண்டலம் வழியாக திருப்பி விடப்பட்டது. காலை 8:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஒரு வழி பாதையாக மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை செயல்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக ஒரு வழி பாதையை கடைபிடிக்காமல் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் தெற்கு கவரை தெரு வழியாக லேனா மெடிக்கல் அருகே மஞ்சக்குப்பம் சாலையை அடைகின்றனர். இந்த ஒரு வழிப்பாதையில் போலீஸ் ஜீப் அவசர காலத்திற்கு செல்கிறது என்றால் அதேப்போல அரசு வாகனங்களும் அதேப்'பாணியை' கடைபிடிக்கின்றன. போஸ்ட் ஆபீஸ் ரவுண்டானாவில் இருந்து சிட்டி யூனியன் பேங்க் வரை உள்ள 50 மீட்டர் தொலைவு மட்டுமே ஒரு வழி பாதையாக இந்த சாலை செயல்படுவதால் அதன் பிறகு ஆல்பேட்டை வரை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். கனரக வாகனங்கள் மட்டுமே செம்மண்டலம் வழியே கடைபிடித்து வரும் நிலையில் மற்ற வாகனங்கள் அனைத்தும் விதிகளை மீறி தெற்கு கவரைத் தெரு வழியாக மஞ்சக்குப்பம் மெயின் ரோட்டை அடைகின்றன. போலீசார் கவனம் செலுத்தி தெற்கு கவரை தெரு வழியாக வாகனங்கள் செல்லாமல் மஞ்சக்குப்பம் மணிகூண்டு வழியாக சென்று அடைவதற்கான ஏற்பாடுகளை செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.