மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் மனு
புவனகிரி; புவனகிரி அருகே வளையமாதேவி கிராம மக்கள், இலவச மனைப்பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு அளித்தனர்.புவனகிரி தாலுகா, சேத்தியாதோப்பு அடுத்த கீழ் வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், இலவச மனைப்பட்டா கேட்டு பல முறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் புவனகிரி தாலுகா அலுவலக வளாகத்திற்கு பேரணியாக வந்தனர்.புவனகிரி தாசில்தார் கணபதி, பொதுமக்களிடம் தனித்தனியாக மனுக்கள் பெற்றார். அப்பகுதியைச் சேர்ந்த 153 பேர் இலவச மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். அதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.