உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார்! வெலிங்டன் நீர்த்தேக்க ஷட்டர்கள் சீரமைப்பு தீவிரம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார்! வெலிங்டன் நீர்த்தேக்க ஷட்டர்கள் சீரமைப்பு தீவிரம்

திட்டக்குடி ; பருவமழையை எதிர்கொள்ள, திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் ஷட்டர்கள் சீரமைப்பு பணியில் நீர்வளத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெலிங்டன் நீர்த்தேக்கம் உள்ளது. விவசாய தொழிலுக்கு பிரதானமாக விளங்கும் இதன் நீர்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ., கரையின் நீளம் 4,300மீட்டர். முழு கொள்ளளவு 2 ஆயிரத்து 580 மில்லியன் கனஅடி ஆகும். 27 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.கடந்த 1996ல் உள்வாங்கிய நீர்த்தேக்கத்தின் கரைகள் உலக வங்கி நிதியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் அடிக்கடி கரைகள் உள்வாங்குவது தொடர்கதையாக இருந்ததால் போதிய அளவு நீரை தேக்க முடியவில்லை. 2009ல் மீண்டும் 29.71கோடி ரூபாயில் கரைகள் புனரமைக்கப்பட்டது.2011ம் ஆண்டு முதல் நீர்பிடிப்பு செய்யப்பட்டு, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2017ல் வெலிங்டன் நீர்தேக்கத்தின் ஷட்டர்கள், கரைகள் சீரமைப்பு உள்ளிட்டவை 6.5 கோடியில் சீரமைக்கப்பட்டது. இப்பணி முடிந்து 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கரையின் 1,600வது மீட்டரில் மீண்டும் கரை பகுதி 15 மீட்டர் நீளம், மூன்று மீட்டர் ஆழத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கியது.அப்போது பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. தொடர்ந்து, 2018 செப்டம்பரில் மீண்டும் கரையில் வெடிப்பு ஏற்பட்டது. நிபுணர் குழு ஆலோசனைப்படி வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, தற்காலிகமாக 1.48 கோடியில் 'ரிங்' வளைவு அமைக்கப்பட்டது. இதையடுத்து கரை பராமரிப்பு அணை மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெலிங்டன் நீர்த்தேக்கம் கொண்டுவரப்பட்டது. அதன்பின், மத்திய நீர்வள ஆணையக்குழுவும் கரை பகுதிகளை ஆய்வு செய்தனர். ஆனால் கரை மேம்பாட்டிற்காக எந்த பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அவற்றை எதிர்கொள்ளவும், வெலிங்டன் நீர்தேக்கத்தின் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் ஷட்டர்கள் மற்றும் உபரிநீர் வெளியேறும் வாய்க்காலின் ஷட்டர்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணியில் நீர்வளத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !