உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெலிங்டன் நிரம்புகிறது விவசாயிகள் மகிழ்ச்சி

வெலிங்டன் நிரம்புகிறது விவசாயிகள் மகிழ்ச்சி

திட்டக்குடி: தொடர் கனமழை காரணமாக வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் பிரதான நீர்த்தேக்கமாக வெலிங்டன் உள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இதன் ஆழம் 29.7 அடி ஆகும். ஏரியில், 2,580 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும். நீர்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ., கரையின் நீளம் 4,300 மீட்டர் ஆகும்.இந்த நீர்த்தேக்கத்திற்கு, சேலம் மாவட்டம் கல்வராயன், சேர்வராயன் மலைகளில் இருந்து உருவாகும் வசிஷ்ட நதி மற்றும் பெரம்பலூர் மாவட்டம், பச்சைமலையில் உருவாகும் சுவேத நதியுடன் (வெள்ளாறு) இணைந்து, கடலுார் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்றில் கலக்கிறது.அவ்வாறு கலக்கும் மழைநீர், பருவமழை காலங்களில் தொழுதுார் அணைக்கட்டு வழியாக வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு திருப்பி விடப்படும். இதனால் நீர்தேக்கத்தில் தண்ணீர் தேக்கி வைத்து பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்துவது வழக்கம்.அதன்படி, தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் 'பெஞ்சல்' புயல் காரணமாக வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொழுதுார் அணைக்கட்டில் இருந்து 2,900 கனஅடி தண்ணீர் பாசன வாய்க்கால் மூலம் நேற்று முன்தினம் முதல் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு திறக்கப்பட்டது.நீர்த்தேக்கத்தில் 15 அடியாக இருந்த தண்ணீரின் அளவு, தற்போது நீர்வரத்து காரணமாக 18.5 அடியாக அதிகரித்துள்ளது. போர்வெல் பாசன விவசாயிகள் மற்றும் வெலிங்டன் பாசன வாய்க்கால் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ