கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்... திறக்கப்படுமா; விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் கோரிக்கை
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சொர்ணாவாரி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட நெல் அறுவடை அதிகரித்துள்ளதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகளவு கரும்பு பயிர் செய்து வந்த மாவட்டம் கடலுார். தற்போது கரும்புக்கு கூடுதல் செலவு மற்றும் தொகை தாமதம் ஆகியவற்றால் பல விவசாயிகள் நெற்பயிருக்கு மாறினர் . நெல் பயிர் நடவு செய்வதில் இருந்து அறுவடை வரை அனைத்துமே இயந்திரத்தனால் செய்து கொள்ள முடியும். அதனால் விவசாய கூலிகளை நம்பி இல்லாமல் பயிர் செய்யப்படுவதால் பெரிய விவசாயிகள் பலர் நெல் பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்ற னர். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சொர்ணாவாரி பட்டத்தில் நெல் நடவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு பருவத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் நெல் விளைச்சல் கூடுதலாகியுள்ளது. மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தது. இதன் காரணமாக தற்போது அறுவடை சீசன் துவங்கியுள்ளது. அதாவது விருத்தாசலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், பெண்ணாடம், திட்டக்குடி போன்ற இடங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. அவற்றை அறுவடை செய்து விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இடைத்தரகர் இல்லாமல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மோட்டா ரகம் 24.05 ரூபாய்க்கும், சன்னரகம் 24.50 ரூபாய்க்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனால் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விற்பனை செய்ய ஆர்வமாக உள்ளனர். தற்போது,நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 600 முதல் 650 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி குடோனுக்கு அனுப்பப்பட வேண்டும். லாரிகளில் மூட்டைகளை ஏற்றுவதற்கு தாமதம் ஆவதால், நெல் விற்பனைக்காக பதிவு செய்துள்ள விவசாயிகள் 10 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நெல்லை நிலத்திலேயே பாதுகாப்பாக வைத்திருக்க பல்வேறு பிரச்னை உள் ளது. அதனால் கொள்முதல் நிலையங்களில் விரைவாக விற்றுவிட வேண்டும் என கருதுகின்றனர். கடலுார் மாவட்டத்தில் தற்போது 126 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இந்த கொள்முதல் நிலையங்கள் குறைவாக இருப்பதால்தான் நெல் விவசாயிகளிடமே அதிகளவில் தேக்க நிலை உள்ளது. கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறந்தால் விவசாயிகள் விரைவில் நெ ல்லை விற்று விடலாம் என கருதுகின்றனர். எனவே அறுவடை நேரத்தில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.