கொள்முதல் நிலையங்களில்... இடைத்தரகர்கள்; அதிகாரிகள் கவனிப்பார்களா?
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் குருவைப் பட்டத்தில் நடவு செய்யப்பட்ட நெல் அறுவடை அதிகரித்துள்ளதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அதே நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் அதிகளவு கரும்பு பயிர் செய்து வந்த மாவட்டம். தற்போது கரும்புக்கு கூடுதல் செலவு, கட்டுமானம் குறைந்ததால் தமிழகத்தில் 45 சர்க்கரை ஆலைகள் இருந்த நிலையில் 12 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்ட நிலையில் 33 ஆலைகள் மட்டுமே உள்ளன. இதனால் கரும்பு பயிர் செய்து வந்த விவசாயிகள் நெல்லுக்கு மாறினர். இதன்காரணமாக நெற்பயிர் செய்யும் பரப்பளவு கூடுதலாகி வருகிறது. தற்போது 22.50 லட்சம் ஏக்கரில் நெல் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பரப்பளவு கடந்த ஆண்டை விட அதிகம் என கணக்கிடப் பட்டுள்ளது. மேலும் பருவம் தவறிய மழையால் நெற்பயிர் மட்டும்தான் லாபத்தை கொடுக்கிறது. பயிர்கள் எல்லாம் மழைநீர் தேங்குவதால் அழுகி விடுகின்றன. நெல்லுக்கான கொள்முதல் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இது தவிர மாநில அரசும் ஆதரவு விலையை வழங்குகிறது. இதனால் நேரடி கொள்முதல் நிலையங்களில் சன்ன ரகம் ஒரு கிலோ 24.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லுக்கு சிறந்த விலையாக இருப்பதால் விவசாயிகள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் லாபம் சம்பாதிக்க விரும்புகின்றனர். குறுவை பட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி பகுதிகளில் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்ய விரும்புகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இதுவரை மாவட்டத்தில் 126 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையங்கள் குறைவாக இருப்பதால்தான் நெல் விவசாயிகளிடமே அதிகளவில் தேக்க நிலை உள்ளது என கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறந்தால் விரைவில் நெல்லை விற்று விடலாம் என விவசாயிகள் கருதுகின்றனர். அதனால், மீண்டும் கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து கடலுார் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், 'நேரடி கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் புகலிடமாக உள்ளது. பொதுமக்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ரேஷன் கார்டுக்கான அரிசி தரமாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகளும் நெல்லை தரமாக கொள்முதல் நிலையங்களில் வழங்க ஒத்துழைக்க வேண்டும். அரசு கொள்முதல் நிலையங்கள் அரசு கண்காணிப்பும், கட்டுப்பாடும் அவசியம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அரசுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படும்' என்றார்.