முடங்கும் விளையாட்டு மன்றங்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், கிராமப் பகுதிகளில் துவங்கப்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு மன்றத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலைஞர் நுாற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், கடந்தாண்டு வழங்கப்பட்டது. கடந்த 2023--24 நிதியாண்டில் இதுகுறித்து அறிவிக்கப்பட்டு, கடந்தாண் டில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகளுக்கான பேட், பால், நெட், அளவு டேப், ஜெர்ஸி என 33 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கப்பட வேண்டும். அதன் தலைவராக ஊராட்சித்தலைவரும், மற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் விளையாட்டில் திறமையுள்ள வீரர்கள், ஊராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சி பெறலாம். அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் உபகரணங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கும், முறையாக இருப்பு வைப்பதற்கும், விளையாட்டு பயிற்சி தொடர்ந்து நடப்பதை கண்காணித்து, அதற்கான சிறப்பு கூட்டம் நடத்தவும் உத்தரவிடப்பட்டது. ஊராட்சிகளில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்வதற்கான இடம் தேர்வு செய்து, ஊராட்சி நிர்வாகத்தினர் பயிற்சி நடப்பதை கண்காணிக்கவும் வழிமுறை வழங்கப்பட்டது. ஆனால், கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சிகளில், விளையாட்டு மன்றங்கள் செயல்படவில்லை. விளையாட்டு பயிற்சிகளுக்கென கிராமங்கள் தோறும் உருவாக்கப்பட்ட மைதானங்களும் பராமரிப்பின்றி வீணாகியது. தற்போது இத்திட்டம் ஊராட்சிகளில் செயல்பாடில்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.