உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /   சேலம் பாசஞ்சர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை... நீட்டிக்கப்படுமா: ரயில்வே லுாப் லைன் இல்லாததுதான் காரணமா

  சேலம் பாசஞ்சர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை... நீட்டிக்கப்படுமா: ரயில்வே லுாப் லைன் இல்லாததுதான் காரணமா

கடலுார்: சேலம் - கடலுார் பாசஞ்சர் ரயிலை திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் மீட்டர்கேஜ் ரயில்பாதையாக இருந்தது. கடந்த 2010ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு புதிய ரயில்கள் விடப்பட்டது. தற்போது, இந்த மார்க்கத்தில் ஒரு சில பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கடலுார் மாநகரில் பஸ் நிலையமும், ரயில் நிலையமும் அருகருகே உள்ளன. பொது மக்களுக்கு வேறு எங்கும் கிடைக்காத சிறந்த வாய்ப்பு. இவ்விரு வாய்ப்புகள் இருந்த போதும் நெடுந்துார ரயில்கள் வராததால் பொது மக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாவட்ட தலைநகரான கடலுார் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கடந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயங்குகின்றன. இருப்பினும் திருச்சி - சென்னை மார்க்கத்தில், அரியலுார், விருத்தாசலம் மார்க்கத்தை காட்டிலும் ரயில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது. சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் என அதிக ரயில்கள் இயக்கம் இல்லாததால், கடலுார் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் அடிப்படை வசதிகள் செய்தும் பயனளிக்கவில்லை. ரயில்களை நிறுத்தி, மறுமுனையில் திரும்பிச் செல்லும் வசதிகள் இல்லை. இதுபோன்ற நிர்வாக குளறுபடிகளால், சேலம் - கடலுார் பாசஞ்சர் ரயில், திருப்பாதிரிபுலியூர் செல்லாமல் துறைமுகம் ரயில் நிலையத்துடன் திரும்பிச் செல்லும் அவலம் தொடர்கிறது. இதனால், கடலுார் சென்று வரும் பயணிகள், துறைமுகத்தில் இறங்கி, திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையத்திற்கு பஸ், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணத்தில் பயணிக்கும் அவல நிலை உள்ளது. அதுபோல், கடலுார் பயணிகள், துறைமுகம் வந்து, அங்கிருந்து ரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், கடலுார் - சேலம் பாசஞ்சர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ரயில்வே ஊழியர் தரப்பில் கூறும் போது,'சென்னை - விழுப்புரம் - கடலுார் மார்க்கத்தில் டெல்டா மாவட்ட எல்லை வழியாக தென்மாவட்டங்களுக்கு அதிக ரயில் போக்குவரத்து வசதி இல்லை. திருப்பாதிரிபுலியூரில் ரயில் நிலையம் அருகே பஸ் நிலையம், தபால் நிலையம் அமைந்துள்ளதால் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள இடவசதி இல்லை. இதனால் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் விரிவு படுத்தப்படவில்லை. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் எதிரெதிர் திசைகளில் மட்டுமே தண்டவாளங்கள் உள்ளன. லுாப்லைன் எனப்படும் ரயில்களை நிறுத்தும் வசதி இல்லாததால், சேலம் - கடலுார் பாசஞ்சர் ரயில் செல்லும்போது நிறுத்தி செல்ல இடவசதியின்றி துறைமுகம் ரயில் நிலையத்தில் நிறுத்தப் படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ