இறந்த குழந்தையுடன் திரிந்த பெண்ணால் கடலுாரில் பரபரப்பு
கடலுார் : கடலுாரில் நள்ளிரவில் இறந்த குழந்தையுடன் திரிந்த பெண்ணை உறவினர்கள் மடக்கிப்பிடித்து கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிதம்பரம் அடுத்த ஆடூரைச் சேர்ந்த பாலமுருகன், 45; இவரது மனைவி பச்சையம்மாள், 40; இவர்களுக்கு மூன்று வயது குழந்தை ரோஷிணி உட்பட 3 பெண் குழந்தைகள். பாலமுருகனுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பாலமுருகனை நலம் விசாரிக்க வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த உறவினர், ஊருக்கு செல்லும் போது, மூன்று குழந்தைகள் மற்றும் பச்சையம்மாளை உடன் அழைத்து சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு திண்டிவனத்தில் உறவினர் வீட்டில் இருந்த மூன்று வயது பெண் குழந்தை ரோஷிணி திடீரென இறந்துவிட்டது. அதனால் பச்சையம்மாலுடன் மூன்று குழந்தைகளுடன் ஊருக்கு பஸ்சில் அனுப்பி வைக்கிறேன் என செல்போனில் தெரிவித்துவிட்டு துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் மற்றும் உறவினர்கள் கடலுார் பஸ் நிலையத்திற்கு வந்து தேடிப்பார்த்தனர். அதிகாலை பச்சையம்மாள் இறந்த குழந்தையை தோளில் போட்டு துண்டால் போத்தியவாறு கடலுார் உழவர் சந்தை அருகே நடந்து சென்றார். உறவினர்கள் பச்சையாம்மாளிடம் இருந்து இறந்த குழந்தையை கைப்பற்றி, கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, குழந்தை இறப்பில் சந்தேகம் உள்ளது என உறவினர்கள் புகார் தெரிவித்து கதறி அழுதனர். இறந்த குழந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால், அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து கடலுார் புது நகர் போலீசார் குழந்தை இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.