ரயில்வே கேட்டில் நின்றகூட்ஸ் ரயிலால் பாதிப்பு
கடத்துார், :கடத்துார் அருகே, புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்குள்ள ரயில்வே கேட் வழியாக தர்மபுரி, கடத்துார், அரூர், பொம்மிடிக்கு, ஆயிரக்கணக்கானோர் தினமும் வாகனங்களிலும், பஸ்களிலும் சென்று வருகின்றனர்.நேற்று மதியம் கோவை -சென்னை மார்க்கத்தில், சேலத்தில் இருந்து சென்னை நோக்கி கூட்ஸ் ரயில் ஒன்று வந்தது. தொங்கனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே மின் பாதையில் கோளாறால், மதியம், 2:30 மணிக்கு புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட்டில் சாலையின் குறுக்கே கூட்ஸ் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் தர்மபுரி, அரூர், பொம்மிடி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட குக் கிராமங்களுக்கு செல்லும் மக்கள், கேட்டை கடக்க முடியாமல் அவதிப்பட்டனர். தர்மபுரியிலிருந்து வந்த பஸ்கள், ரயில்வே கேட் அருகிலேயே பயணிகளை இறக்கி விட்டனர். தாளநத்தம், வேப்பிலை பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி பகுதிகளுக்கு செல்லும் மக்கள் ரயில்வே கேட்டில் சாலையின் குறுக்கே நின்ற கூட்ஸ் ரயிலுக்கு அடியில் புகுந்து கேட்டை கடந்து சென்றனர். இந்த மின்பாதை கோளாறால் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் கூட்ஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன.அதன்பின் பவர் பிளாக் மூலம் மின்பாதை சரி செய்யப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு பிறகு கூட்ஸ் ரயில் புறப்பட்ட பின் போக்குவரத்து சீரானது.