குடியிருப்புகளுக்குள் வரும் யானையைஅடர் வனத்திற்கு விரட்ட வேண்டுகோள்
குடியிருப்புகளுக்குள் வரும் யானையைஅடர் வனத்திற்கு விரட்ட வேண்டுகோள்பென்னாகரம்:பென்னாகரம் அருகே, குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை அடிக்கடி சுற்றித்திரிவதால், மிகுந்த அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்கள், அடர் வனத்திற்குள் யானையை விரட்ட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோடை காலங்களில் கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள், உணவு, தண்ணீர் தேடி, தமிழகத்திற்கு படையெடுக்கும். இந்த யானைகள் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிடுவது வழக்கம். அந்த யானைகள் வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியால், வனத்தை விட்டு விளைநிலங்களுக்கு புகுந்து விடுகின்றன. மேலும் அவை, இரவில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.கடந்த, 2 வாரங்களுக்கு மேலாக, ஒகேனக்கல் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் ஒற்றை ஆண் யானை, கூத்தப்பாடி, மடம், கே.குள்ளாத்திரம்பட்டி, பூதிப்பட்டி, அரண்மனைப்பள்ளம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகிறது. வன ஊழியர்களின் அலட்சியத்தால் அடிக்கடி ஊருக்குள் வரும் யானை, வனப்பகுதிகளை ஒட்டிய நிலங்களில், அறுவடைக்கு தயாராகி வரும் ராகி, சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு நாசப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கூத்தப்பாடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்த ஒற்றை ஆண் யானை, ராகி, நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி, மடம் வழியாக விடியற்காலை வனப்பகுதியை சென்றடைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஆகவே, வனத்துறையினர் காட்டுக்குள் இருந்து யானைகள் வெளியேறாமல் தடுத்து நிறுத்த, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.