நீர்நிலைகளை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது.இதில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:நடப்பாண்டில் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கரும்புக்கு கூடுதல் பணம் வழங்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்துறை அலுவலகத்தில், 60 கிலோ வி.ஜி.டி., என்ற நெல் ரகத்தை வாங்கி சாகுபடி செய்ததில், உரிய மகசூல் கிடைக்கவில்லை. மேலும், விளைந்த நெல்லில் கலப்பு இருப்பதாக கூறி, பதிவு செய்த பிறகும் அரூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். அரசிடம் வாங்கிய நெல்லை அரசாங்கமே வாங்குவதை தவிர்த்தால், வேறு எங்கு விற்பனை செய்வது என்பதை தெரிவிக்க வேண்டும்.கடந்த இரு மாதங்களாக தக்காளி, கத்தரி, வெண்டை, முள்ளங்கி உட்பட அனைத்து வகையான காய்கறிகளும் விலை சரிந்து, விவசாயிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், தர்பூசணி விவசாயிகளும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், இழப்பையும் நடப்பாண்டில் சந்தித்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பண்ணை குட்டை, தடுப்பணை, நீரோடைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுப்பதுடன் வறட்சியை பயன்படுத்தி, நீர் நிலைகளை உடனடியாக துார்வார வேண்டும். ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், குறிப்பிட்ட, 15 பேருக்கு மட்டும் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. புதிதாக விவசாயிகள் வந்தால், அவர்களை பேச அனுமதி வழங்குவதில்லை. இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினர். இதற்கு, மாவட்ட கலெக்டர் சதீஸ் பதிலளித்து பேசியதாவது:கரும்பு பிழித்திறனுக்கு ஏற்றவாறு கணக்கீடு செய்து, இதற்கான தொகை மற்றும் பாதிப்புக்கு ஏற்றவாறு கூடுதல் இழப்பீடு சேர்த்து வழங்கப்படுகிறது. ஏரிகள், பண்ணை குட்டை, நீரோடை, தடுப்பணைகள் உள்ளிட்டவற்றை யார் எந்த இடத்தில் ஆக்கிரமித்து இருந்தாலும், உடனடியாக உரிய ஆவணங்களுடன் என்னிடம் புகார் அளியுங்கள். ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், துார்வாரப்பட வேண்டிய ஏரிகள் குறித்த, விபரங்களை அளித்தால், வறட்சியை பயன்படுத்தி, இரண்டு மாதத்திற்குள் துார்வாரும் பணிகளை தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்பின் மூலம், துரிதமாக துார்வாரப்படும் ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினத்தில், தர்மபுரி மாவட்டத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.