ஓராண்டில் அரூர் வருவாய் கோட்டத்தில் 4,874 பழங்குடி இன சான்றிதழ் வழங்கல்
அரூர், ஆக. 29-அரூர் வருவாய் கோட்ட ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஓராண்டில், மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் முறையே, 423 மற்றும், 155 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இருளர், மலையாளி, ஆதி திராவிடர்கள் மற்றும் அருந்ததியர் மக்களுக்கு பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பட்டாக்கள் பெற்று கணக்குகளில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த பட்டாக்கள் அனைத்தும், இ-பட்டாக்களாக அரூர் தாலுகாவில், 1,162 பயனாளிகளுக்கும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 3,054 பயனாளிகளுக்கும், தர்மபுரி மாவட்டத்தில் நடந்த அரசு விழாக்களில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சாந்தி ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளது. மலையாளி, இருளர், நரிக்குறவர், குருமன்ஸ் பழங்குடி இனத்தை சேர்ந்த, 4,874 மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களுக்கு பழங்குடியின சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தாமத இறப்பு பதிவுகள், 207 மனுதாரர்களுக்கு செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், 51 தாமத பிறப்பு பதிவுகளுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு பிறப்பு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா மாறுதல் மேல்முறையீடுகள், பட்டா பெயர் திருத்தங்கள், பரப்பு திருத்தங்கள் உள்ளிட்ட மேல் முறையீடு மனுக்களின் பெயரில், 174 ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. முதல்வர் விபத்து நிவாரண நிதி உதவி திட்டத்தில், 148 பேருக்கு, 1.28 கோடி ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.