தர்மபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை பா.ம.க., போராடி நிச்சயம் கொண்டு வரும்
தர்மபுரி, அக். 22--தர்மபுரி மாவட்ட மக்களின் நலன் கருதி, காவிரி உபரிநீர் திட்டத்தை, பா.ம.க., தொடர்ந்து போராடி கொண்டு வரும்,'' என, பசுமை தாயகம் தலைவர் சவுமியா பேசினார்.தர்மபுரி தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க, பா.ம.க., வேட்பாளரும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா நேற்று பாலக்கோடு வந்தார். அப்போது அவர், பாலக்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடைமடை, எர்ரனஹள்ளி, சென்னப்பன்கொட்டாய், கரகூர், சீங்காடு, 5வது மைல், ஜோதிஹள்ளி, சர்க்கரை ஆலை, பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட், பேளாரஹள்ளி உள்ளிட்ட பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களிடையே அவர் பேசியதாவது:தர்மபுரி தொகுதி, லோக்சபா தேர்தலில் தோல்வியுற்றாலும், எனக்காக ஓட்டு போட்ட லட்சக்கணக்கான வாக்காளர்களுக்காக, நான் ஏற்கனவே தேர்தலின் போது அளித்த வாக்குறுதி படி, தர்மபுரி மாவட்டத்தில், குடிநீர், விவசாயம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, முன்னுரிமை கொடுத்து போராடுவேன். கடந்த அக்., 4 ல் பா.ம.க., சார்பில், காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, நடந்த அரை நாள் கடையடைப்பு போரட்டத்திற்கு வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் விவசாயிகளின் நலன் கருதி, முழு ஆதரவு அளித்ததால், போராட்டம் வெற்றி பெற்றது. இதில், போராட்டத்திற்கு ஒரு நாள் முன்பு, உபரிநீர் திட்டம் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு அறிவித்தது. தர்மபுரி மாவட்ட மக்களின் நலனில், அவர்களுக்கு சிறிதளவும் அக்கறையில்லை. திட்டத்தை நிறைவேற்றவும், ஆளும் அரசுக்கு மனமில்லை. எனவே, காவிரி உபரிநீர் திட்டத்தை, பா.ம.க., தான் போராட்டம் நடத்தி கொண்டு வரும். அதற்காக நான் உங்களுடன் இருப்பேன்.இவ்வாறு, அவர் பேசினார்.