அரசியலுக்கு வரும் நடிகர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டு ம்
அரூர்:தர்மபுரி மாவட்டம் அரூரில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:அரசியல் கட்சிகள் தேவையற்ற இலவசங்கள் அறிவிப்பதை தவிர்க்க வேண்டும். வரும் காலங்களில், 50 சதவீதம் விவசாய துறையை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வாரச்சந்தை நிலங்களை மீட்டு, மீண்டும் அங்கு சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலுக்கு வரும் நடிகர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன்பின், அரசியலுக்கு வரவேண்டும். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மே, 24ல், தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நான்காமாண்டு பனை கனவு திருவிழா, மாநாடு நடக்கிறது. அதேபோல், தமிழகத்தில் வரும் டிசம்பரில் நடத்தும், தமிழ்நாடு கள் இயக்கம் மதுவிலக்கு மாநாட்டில், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்பார். அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார். தமிழ்நாடு கள் இயக்க நிர்வாகிகள் சபாநாயகம், பழனிசாமி உடனிருந்தனர்.