ராஜகால்வாயில் கலக்கும் கழிவுகளால் துர்நாற்றம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் உள்ள பெரிய ஏரி, 160 ஏக்கர் கொண்டது. கடந்த காலங்களில் ஏரி நிரம்பியவுடன், அதிலிருந்து வெளியேறும் உபரி நீர், ராஜகால்வாய் வழியாக சென்று, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வாணியாற்றில் கலக்கும். இந்நிலையில் அரூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், தில்லை நகர், கீழ்பாட்சாபேட்டை, மஜீத்தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ராஜகால்வாயில் கலந்து, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள பாலத்தின் அடியில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வர்ணீஸ்வரர் கோவில் எதிரில், செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவுகள் மற்றும் பானிபூரி, தள்ளுவண்டி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள், ராஜகால்வாயில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால், பக்தர்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல், மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் பரிதாபம் உள்ளது. எனவே, ராஜகால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன், இறைச்சி உள்ளிட்ட கழிவுகள் கொட்டுபவர்கள் மீது, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.