உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டங்களை கலெக்டர் ஆய்வு
'உங்களை தேடி உங்கள் ஊரில்'திட்டங்களை கலெக்டர் ஆய்வுதர்மபுரி, அக். 17-தர்மபுரியில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று ஆய்வு செய்தார். அதன்படி, தர்மபுரி அடுத்த, அரியகுளம் இந்திரா நகரில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்தார். கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்படும் வகுப்பறை கட்டடங்கள், தர்மபுரி பாரதிபுரத்திலுள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குடோன் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அரியகுளம் பகுதியில் மட்பாண்டம் செய்யும் தொழிலாளர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்கடன் வழங்கப்பட்டு, ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிறுவனத்தை ஆய்வு செய்து, பட்டு ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை, வருவாய் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா, ஆர்.டி.ஓ., காயத்ரி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா உள்பட பலர் உடனிருந்தனர்.