மழையால் பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க கோரிக்கை
அரூர், அரூர் பகுதியில் மழை வெள்ளத்தில் மூழ்கி நெல், மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், வடகிழக்கு பருவமழையால், நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அரூர் பகுதியில் உள்ள தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து வரத்துவங்கி உள்ளது. மேலும், காட்டாற்று வெள்ளநீர் புகுந்ததில், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தீர்த்தமலை, வீரப்பநாயக்கன்பட்டி, மாம்பாடி, கீழானுார், மாம்பட்டி செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், சில நுாறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெல், மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், மஞ்சள், வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்திருந்த பயிர்கள் நீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளதை கண்டு, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை கொண்டு முறையாக கணக்கெடுத்து, சேதமடைந்துள்ள பயிர்களுக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.