ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடங்களை தடுக்க கோரிக்கை
அரூர், அரூரில் உள்ள பெரிய ஏரி, 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த காலங்களில் ஏரி நிரம்பியவுடன், அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் ராஜ வாய்க்கால் மூலம், அரூரில் உள்ள பெரியார் நகர், குபேந்திரன் நகர், மஜீத் தெரு, வர்ணீஸ்வரர் கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வாணியாற்றில் கலக்கும்.ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து, பல இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சட்டசபை மனுக்கள் குழுவுக்கு, 2008ல்- மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுக்கள் குழுவினர் நேரில் பார்வையிட்டு, ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, துார் வார பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டனர்.ஆனால், இதுவரை துார் வாரப்படவில்லை. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் பொது மக்கள் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் மீண்டும், சில இடங்களில் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.